அன்றாடத் தேவைகளின் முக்கியத்தை உணர்ந்து, அதை நிறைவேற்றியபடியே உனது அடுத்த இலக்குக்காக முயல்வதும்... உன்னை மேலும் மேலும் 'அப்டேட்' செய்துகொண்டு, வாழ்வைக் கவனித்து கவனித்து உனது கலை மனசைக் கூர்மைப்படுத்திக் கொள்வதும்தான் அதிமுக்கிய மாகப்படுகிறது. ஆனால், இவற்றைவிடவும் பெரிதான ஒன்று உண்டு. இந்தப் பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தவர் எனது மாமா.
ஒருநாள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். ஒரு சிறு பருக்கை கீழே சிதறிவிட்டது. அவர் புன்னகையோடு சொன்னார், ''இந்தப் பருக்கையோட நிலையைப் பாத்தியா... பாவம்!''
நான் வியப்பாக ''ஏன்?'' என்றேன்.
''இந்தப் பருக்கை எத்தனை இடத்தில் தப்பிச்சிருக்கு. அறுவடையில, களத்து மேட்டுல, அரவை ஆலையில, கடையில, அரிசி களைகையில, சாதம் வடிக்கையில... அப்படின்னு எத்தனை இடங்கள்! எங்கேயும் தவறாம அதோட பயனுக்காக எவ்வளது தூரம் கடந்து வந்துச்சு. இப்பப் பாரு... சாதமா மாறி உன் கைக்கு வந்து, கடைசி நொடியில் தவறி விழுந்துடுச்சே... எவ்வளவு பாவம் அது!''
நான் அதிர்ந்து, அப்படியே சிலையாக நின்றுவிட்டேன். எவ்வளவு எளிமையான மனிதரி டம் இருந்து எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!
----- இயக்குனர் மகேந்திரன்