Wednesday, January 23, 2013

தபு ஷங்கர் காதல் கவிதைகள் - IV



கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே விட்டோமோ
நிலவை!' என்று.


தொலைப்பேசியில்
நீ எனக்கு தானே 'குட்நைட்' சொன்னாய்.
ஆனால் இந்த இரவோ
அதைத்தான் நீ 'நல்ல இரவு' என்று
சொல்லிவிட்டதாக நினைத்து
விடியவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே.


தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப் போல்
நீ ஒவ்வொரு முறையும்
உன் உடையை சரி செய்கிறாய்.


காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்.
அவ்வளவு தான்...
நின்றுவிட்டது காற்று.

 

Monday, January 21, 2013

திருநெல்வேலி வரலாறு!


 திருநெல்வேலி-_தென்தமிழகத்தின் பெருநகரம். வற்றாத தாமிரபரணி, இங்கேயே தோன்றி இங்கேயே மறைந்து விடுகிறது. அதனால், எந்த பிரச்னைக்கும் ஆளானதில்லை இந்த நதி. சுருக்கமாக,"நெல்லை' என்று இவ்வூரை அழைப்பர். நெல்லுக்கும், இந்த ஊருக்கும் சம்பந்தம் உள்ளதால், "திருநெல்வேலி' என்ற பெயர் அமைந்தது.

முழுதும் கண்ட ராமன் என்ற மன்னன், திருநெல்வேலியை ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில், 12 ஆண்டுகள் மழை இல்லை. வற்றாத தாமிரப...ரணி கூட, வறட்சியின் பிடியில் சிக்கியது. மக்களுக்கு எப்படி உணவிடுவது என்று மன்னன் கையைப் பிசைந்து கொண்டிருந்தான்.
வேதசன்மா என்பவர், தினமும் நெல்லை வந்து, நெல்லையப்பரை வணங்குவார். உணவுக்கு என்ன தான் பஞ்சமாக இருந்தாலும், தங்களை வாழவைக்கும் நெல்லையப்பரை மட்டும் பட்டினி போட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதன் காரணமாக, தினமும் அரிசி எடுத்து வந்து, இறைவனுக்கு நைவேத்யம் படைத்து வந்தார். பக்தர்களை சோதிப்பதில் சிவனுக்கு நிகரானவர் யாருமில்லை! அவர் வேதசன்மாவுக்கு சோதனை வைத்தார்.

அவரது சொத்துகளை படிப்படியாகக் கரையச் செய்தார். மிஞ்சியது ஒரு மூடை நெல் மட்டுமே! அது தீர்வதற்குள், மழை பெய்து வயல்கள் விளைந்தாக வேண்டும். "பெருமானே... நான் பட்டினி கிடந்தேனும், உனக்கு தினமும் அமுது படைப்பேன். இந்த நெல் தீர்வதற்குள் மழை பொழிந்து, உன் பங்கையாவது பெற்றுக் கொள்...' என்று வேண்டினார்.

சிவன் அவரது கோரிக்கையை ஏற்றார். ஆனால், அதி<லும் ஒரு சோதனை. ஒருநாள், வேதசன்மா நைவேத்யத்திற்குரிய நெல்லை, திறந்த வெளியில் காயப்போட்டு விட்டு, தாமிரபரணிக்கு நீராடச் சென்றார். அப்போது பெருமழை பிடித்துக் கொண்டது. வேதசன்மா மகிழ்ந்த அதே வேளையில், "ஐயையோ... நெல்லை வெட்ட வெளியில் காயப்போட்டு வந்தோமே... அது நனைந்து விட்டால், இன்றைய நைவேத்யத்திற்கு நெல்லுக்கு எங்கே போவது?' என வேகமாய் வீடு திரும்பினார்.

என்ன அதிசயம்... நெல்லைச் சுற்றி மழை பெய்ததே தவிர, நெல் மீது சொட்டு தண்ணீர் விழவில்லை. மழை நீர் வேலி போல் சுற்றி நின்று, உள்ளிருந்த நெல்லைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. வேதசன்மா பரவசமடைந்தார். "நெல்லுக்கு வேலியிட்ட நாதா' என்று விழுந்து வணங்கினார்.

சிவன் நிகழ்த்திய இந்த திருவிளையாடல் காரணமாகவே, அதுவரை, "வேணுவனம்' என்று அழைக்கப்பட்ட அப்பகுதி, "நெல்வேலி' ஆனது. பின், மரியாதை கருதி, "திரு' என்ற அடைமொழி சேர்ந்து, "திருநெல்வேலி' என மாறியது. சிவன், "நெல்லையப்பர்' எனும் சிறப்புப்பெயர் பெற்றார். அந்த பெயரே நிலைத்து விட்டது. தைப்பூசத் திருவிழாவின் நான்காம் நாள், "நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்ச்சி, நெல்லையப்பர் கோவிலில் நடத்தப்படும்.

தாமிரபரணியில் தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு, நெல்லையப்பர் கோவிலின் அமைப்பே காரணம் என்கின்றனர். எல்லாக் கோவில்களிலும் சுவாமி அபிஷேக தீர்த்தம், வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கு நோக்கி இருக்கிறது. இந்த புனித நீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருண பகவான், எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.

இக்கோவிலில், மூன்று மூலவர்கள் உள்ளனர். "வேண்ட வளர்ந்தநாதர்' சுயம்புமூர்த்தியாக இருக்கிறார். இவரே, "நெல்லையப்பர்' எனப்படுகிறார். இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னிதி முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னிதியும் இருக்கிறது. இவரே, இக்கோவிலின் முதல் லிங்கம் என்பதால், இவருக்கு முதல் பூஜை நடக்கிறது. மூவருமே மூலவராக வணங்கப்படுகின்றனர். பரணியில் நீராடி, பாவங்களைத் தொலைத்து புண்ணியத்தைப் பெற்றுச் செல்ல, நெல்லை நோக்கி பயணியுங்கள்.
 
 
--- நன்றி தினமலர் 

You may also like