Sunday, May 13, 2012

அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை

 
சனிக்கிழமை மாலையே
துவங்கிவிடுகிறது
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் குதூகலம்
... பள்ளி செல்கிற குழந்தைகளுக்கு

ஞாயிறு காலை செய்தித்தாள் இணைப்புகளுடன்
ஒன்றிவிடுகின்றார்
ஓய்வு பெற்ற தாத்தா

தொலைக்காட்சியின்
ஆட்டம் பாட்டங்களில்
ஆரவாரிக்கின்றனர்
அக்காவும் தங்கையும்

சூரியன் சுட்டெரிக்கத் துவங்கும் வரை
தூக்கத்தில் கிடக்கின்றனர்
அண்ணன்கள்

அசைவ உணவுத் தயாரிப்புக்காக
மார்க்கெட்டில் இருந்து திரும்புகின்றனர்
அப்பாவும் சித்தப்பாக்களும்
மெலிதான டாஸ்மாக் வாசனையுடன்

அவரவர் ஞாயிற்றுக்கிழமை
அவரவர் விருப்பம்போல

ஆனால்
அன்றாடம்போலவே
அடுப்படியில் தொடங்கி
அங்கேயே முடிகிறது
அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை!

- ரவி மோகனா
( விகடன், 2010)

You may also like