எந்த ஒரு தொழில்நுட்பத்திலும் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தான் அது நமக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ அமைகிறது.
மாட்டு வண்டிகள் இருந்த காலத்தில் அதில் பயணித்த அனுபவத்திற்கும், இப்போது பல்சரில் (Pulzar) பறக்கும் அனுபவத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனினும் அந்த பழைய மாட்டு வண்டியில் பயணித்த நாட்களை நினைக்கும் போது மனதில் எழும் பசுமையான நினைவுகள் நம்மை சந்தோஷப்படுத்தும். இதனால் பல்சர் பைக்கே தேவையில்லை என்பது இல்லை. பழைய தொழில்நுட்பங்களில் இருக்கும் (இருந்த ?! ) மகிழ்ச்சியை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நமக்கு நினைத்த நேரத்தில் பாடல்கள் கேட்க வேண்டும் எனில் கையில் இருக்கும் செல்போன் மட்டுமே இன்றைய காலத்தில் போதுமானதாக இருக்கிறது. எஃப்.எம்., மெமரி கார்டு மூலம் நினைத்த வேளையில் பாடல்களைக் கேட்கிறோம். இல்லையெனில் இணையத்தின் வாயிலாகவும், யூ-டியூப் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலமும் நமக்கு தேவையான பாடல்களை கேட்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடிகிறது. டூவீலர் ஓட்டும் போதும், பேருந்து பயணத்தின் போதும் ஹெட்-போன்களை காதில் சொருகியபடி பாடல்களை கேட்டுக் கொண்டே பயணிக்கிறோம்.
சற்று முன் நோக்கிச் சென்றால் சிடியில் நமக்கு பிடித்த பாடல்களை பதிந்து வீட்டில் அதிகப்படியான சத்தத்தில் வைத்து கேட்போம். அதற்கு முன்பு டேப்-ரெக்கார்டரில் பாடல்களை பதிந்து கேட்டுக் கொண்டிருந்தோம். எனக்கு தெரிந்து சில குடும்பங்களில் எந்தெந்த பாடல்களை கேசட்களில் பதிவு செய்வதற்கு பல சண்டைகள் நடக்கும்.
அண்ணன் ரஜினி ரசிகனாக இருப்பான். தம்பி கமல் ரசிகனாக இருப்பான். அப்பாவோ சிவாஜி காலத்து பாடல்கள் வேண்டும் என அடம்பிடிப்பார். ஒரு கேசட்டில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆசையும் நிறைவேறும். 'எஜமான்' படத்திலிருந்து ஒரு பாடல் பதிவு செய்ய முடிவு செய்தால், அண்ணன் 'ராக்கு முத்து ராக்கு'க்கு டிக் அடிக்க, தம்பி 'எஜமான் காலடி மண்ணெடுக்க' அடம்பிடிப்பான்.
ஒவ்வோரு படத்திலும் தங்களுக்கு பிடித்த பாடல்களை தேர்வு செய்து கொடுக்க, அதில் அப்பா கடைசியாக முன் பக்கம் ஆறு பாடல்கள், பின் பக்கம் ஆறு பாடல்கள் என இறுதி செய்து பாடல்களை பதிவு செய்ய கேசட் கடையில் கொண்டு கொடுப்பார்.
கடைக்காரர் வெயிட்டிங்கில் வைத்து, ஒரு வாரம் கழித்து வர சொல்வார். சொன்ன தேதியில் அப்பா சென்று கேசட்டை வாங்கி வந்து வீட்டில் போடும் போது, நமக்கு பிடித்த பாடல் எப்போது வருமென ஆர்வமாக கேட்பதுண்டு. இன்றும் அந்த பாடல்களை எங்காவது கேட்கும் போது கேசட்டில் இருந்தபடி அந்த பாடலுக்கு அடுத்து வரும் பாடலின் தொடக்கம் வாயில் முணுமுணுக்க வைக்கிறது.
இளைஞர்கள் இருக்கும் வீடுகள் என்றால் இன்னும் பல கலாட்டாக்கள் அரங்கேறும். ஸ்பீக்கர்களை வாங்கி அதை மண் பானையில் வைத்தால் சத்தம் அதிகமாக கேட்கும் என்பதால் மண் பானைக்குள் வைத்து பாடல்களை அலறவிடுவார்கள். அந்த பக்கம் "ஏண்டா ஸ்பீக்கரை போட்டு இப்படி காதை காலி பண்றீங்க" என்ற அம்மாவின் ஏச்சுக்களை காதில் போட்டுக் கொள்ளாமல் ' ராசாத்தி உன்னை எண்ணி ராப்பகலா கண் விழிச்சேன்' என்று எதிர்வீட்டுப் பெண்ணுக்கு 'பாடல் விடு தூது' அரங்கேறும் கதைகளும் உண்டு.
எதிர்வீட்டுப் பெண் மறுத்து, காதல் தோல்வியில் முடிந்தால் ''போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே'' என சோக கீதங்கள் வீட்டை ஆட்கொள்ளும்.
அந்த காலங்கள் கடந்து வேலை, பொறுப்பு என வெளி ஊருக்கு சென்ற பின் அதே அம்மா அந்த ஸ்பீக்கரை பார்த்து ஏக்கம் கொள்வதும் பல வீடுகளில் நடந்திருக்கும்.
'முதல்வன்' படத்தில் அர்ஜூன் சொல்வது போல் வாழ்க்கையில் 'ரீவைண்ட்' பட்டன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. இல்லையா?
--- பானுமதி அருணாசலம்