Tuesday, January 24, 2012

காமராஜர் - The King Maker



மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்!

ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!

அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். 'இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்' என்று மட்டுமே சொல்லி விட்டு இறங்கினார்!

நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!

கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!

'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!

தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்

( காமராஜர் 25 - ப.திருமாவேலன் )

No comments:

Post a Comment

You may also like