`மாயன்’.. 2012 ல் உலகம் அழியப்போகுதுனு பீதியை கிளப்புனப் பயலுக. அதுக்கப்புறம் தான் 2012 டிசம்பர் வரைக்...கும் எல்லோரும் மாயன் பீதி பிடிச்சுச்சு.
ஆனா திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்கு மாயன்களோடு பல தலைமுறைகளா உறவு உண்டு. இந்த மாயன் நீங்க நினைக்கிற பீதி கிளப்புன மாயன் அல்ல.. இவர் மாயாண்டி சுடலை. தென் மாவட்ட மக்களின் மூதாதையர்களில் பெரும் வீரனாக இருந்திருக்க கூடும். இப்படி ஒவ்வொரு பகுதிக்கும் பல எல்லைக் காத்த வீரர்கள் இருந்திருக்கிறார்கள்.
திருநெல்வேலியில் பெரும்பாலான பகுதி மக்களுக்கு அந்த மாயண்டி சுடலை தான் தலைவன். வீட்டில் குழந்தைகளுக்கு `சுடலை’ என்ற பெயர் தவறாது இருக்கும். பள்ளிகளில் ஒரே வகுப்பில் சுடலை, சுடலை முத்து.. என ஏகப்பட்ட சுடலைகள் இருப்பார்கள். இன்சியல் மூலமே அவர்கள் பிரித்து அறியப்படுவார்கள். இப்போது அந்த மாதிரி பெயர்கள் வைப்பது குறைந்திருக்கும் என நினைக்கிறேன். தற்போது குழந்தைகளுக்கு வடமொழி `ஷ்’களில் முடியும் வடமொழிப் பெயர்களை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சுடலை, முனியாண்டி, முத்தாரம்மன், பேச்சியம்மன், மாசனம், இசக்கியம்மன், உய்க்காட்டுச் சுடலை என்று கிராம மக்களின் கடவுள்களின் பெயர்களே சுவாரஸ்யமானது. அதுவும் அந்த கடவுள்களுக்கு (அல்லது பாட்டன், பூட்டி) கிராமங்கள் தோறும் சொல்லப்படும் விதவிதமான கதைகளையெல்லாம் தொகுத்தால் சுவாரஸ்யங்கள் அடங்கிய களஞ்சியமாகலாம். சிறுவயதில் இந்த மாதிரியான கதைகளை கேட்டுக் கேட்டு வளர்ந்தவன். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கதை சொல்லி தாத்தாவோ பாட்டியோ இருப்பார்கள். அவங்க கதையை சொல்ல ஆரம்பிச்சாப்போதும்.. சுடலையே நம்ம பக்கத்துல வந்து நிக்குறமாதிரி இருக்கும்.
``முனியாண்டி பனமரம் ஒசரத்துல இருப்பான்.. கால்ல சலங்கையைக் கட்டிக்கிட்டு ஜல் ஜல்லுனு.. நடந்து வருவான் ’.. `வில்வண்டிப் பூட்டிக்கிட்டு வெள்ளைக்குதிரையில சுடலை பறந்து வர்றான் பாரு..’’ என்று தாத்தாக்கள் சொல்லும் கதைகள் அவர்களிடத்திலிருந்து மட்டும் வந்ததல்ல.. பல தலைமுறைகள் கடந்து வரும் வரலாறு.
இடையில் கதை சொல்லிகளின் எக்ஸ்ட்ரா டிங்கிரி பிங்கிரி கிராஃபிக்ஸ்கள் சேர்க்கப்பட்டு சுவராஸ்யமான கதைகளாக்கப்பட்டிருக்கும். இன்னைக்கு பத்திரிகைகளில் எழுதும் பல அப்பாடக்கர் எழுத்தாளர்கள் எல்லாம் இந்த கதை சொல்லிகளிடம் பாடம் படிக்க வேண்டும்.. அவ்வளவு பிரமாதமாக கதை சொல்வார்கள்.
பனையையும் அந்த மக்களையும் பிரிக்க முடியாது எனபதால் அவர்களின் சாமிகளுக்கு கோவிலாக இருப்பதும் பனை தான். இந்த தெய்வங்களுக்கு பீடம் எல்லாம் பனையின் அடிவாரம் தான். பனையை வைத்து தான் சாமிகளையும் அடையாளப்படுத்துவார்கள். பெருவாரியாக ஒத்தப்பனைகள் தான் இந்த சாமிகளின் இருப்பிடம்.
இந்த மக்கள் தெய்வங்களை எல்லாம் சிறு தெய்வங்கள் என்று அழைப்பதே தந்திரமான அரசியல். அந்த மக்களைப் பொருத்தளவில் சுடலைகளும், முத்தாரம்மன்களும், இசக்கியம்மன்களும், முனியாண்டிகளும் பெரும் தெய்வங்கள் தான். அவர்களின் மூதாதையர்களை சிறு தெய்வம் என்று சொல்ல நீங்கள் யார்..
அவர்கள் தங்கள் கடவுளான மூதாதையர்களிடம் வாக்குவாதம் செய்வார்கள்.. ஏன் இந்த வருசம் மழை வரலனு சண்டை போடுவார்கள்.. போ.. இனி உன்ன பார்க்க வரமாட்டேன் என்று கோபிப்பார்கள்.. ஊரை செழிப்பாக்குனாத்தான் உனக்கு கொடை.. இல்லனா கிடையாது என்று மிரட்டுவார்கள்.. இன்னும் வயித்துல புழு பூச்சி இல்ல.. பிள்ளப்பொறந்தா உன் பேரை வைக்குறேன்.. கொடை கொடுக்கேன் என்று பம்முவார்கள்.. ஊர் செழிப்பானால் தான் இந்த எல்லைச் சாமிகளும் செழிப்பாவார்கள்.
அப்படி நெல்லையில் பிரபலமான ஒரு எல்லைச்சாமி `சிறுமளஞ்சி ஒத்தப்பனை’ சுடலை ஆண்டவர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கும் வள்ளியூருக்கும் இடையில் இருக்கிறது சிறுமளஞ்சி என்ற ஊர். இந்த ஊர் பிரபலமடைஞ்சதுக்கு காரணமே ஒத்தப்பனை சுடலை தான். இந்த சுடலையின் மூல ஸ்தலம் விஜயநாராயணத்திலிருக்கிறது. அங்கிருந்து மண் எடுத்து வந்து சிறுமளஞ்சியில் வைத்து வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள். 80 ஆண்டுகளுக்கும் மேலாக கொடைவிழா நடத்தப்பட்டு வரும் அந்த கோவிலின் முதல் சாமியாடி மாயாண்டி. அதன்பிறகு அவரது மகன் முத்துராஜ் ஆடினார். இந்த சுடலையின் சிறப்புகள் மற்றும் மிரட்டல்கள் கதைகள் ஏராளம் உண்டு.
இந்த கோவிலை நிர்வகிப்பவர்கள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் எந்த சாதி பேதமில்லாமல் அனைவரும் கலந்து கொள்வதை காணமுடியும். இந்த கோவிலின் கொடைவிழா என்றால் அந்த பகுதி முழுக்க கொண்டாட்டம் தான். பல மைல்கள் தாண்டி எங்கெங்கோ இருந்தெல்லாம் ஆட்கள் வருவார்கள். சிறப்பு பேருந்துகள் விடப்படும்.
பெரிய மனுஷியான பெண் பிள்ளைகள் புது தாவணியுடன் வெட்கம் தின்ன ஒரு பக்கம், அரும்புமீசை வாலிபர்கள் ஒரு பக்கம், பெரியவர்கள் குழந்தைகள் பெண்கள் என ஊரே ஜெகஜோதியாக இருக்கும்.
வளையல் கடையில் ஆரம்பித்து திருவிழா சீனுக்கு தேவையான அத்தனை கடைகளையும் அங்கு பார்க்கலாம். ஒரு பக்கம் இன்னிசை கச்சேரி, இன்னொரு பக்கம் பட்டிமன்றம், கரகாட்டம், வில்லுப்பாட்டு, திரைப்படம் போடுதல் என்று எங்கு திரும்பினாலும் கொண்டாட்டமாக இருக்கும்.
கொடைவிழாவின் ஒரு பகுதியாக சாமியாடுபவர் இரவு 12 மணிக்கு சுடுகாட்டுக்கு வேட்டையாட சென்றுவிட்டு வருவார். அதன்பிறகு சாமக்கொடை ஆரம்பமாகும். நேர்ந்திருப்பவர்கள் தங்கள் ஆடுகளுடன் வரிசையாக நிற்பார்கள். பலி பீடத்தில் ஆடுகள் மார்பு பிளக்கப்பட்டு சாமியாடி ரத்தம் குடிப்பார். விடிய விடிய நடக்கும் இந்த பூஜை.
கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் ஆடு கோழி பலியிடக்கூடாது என்று சட்டம் போட்ட சமயத்தில் இந்த கோவிலுக்கு கொடை வந்தது. பலி கொடுக்க போலீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பிரச்னை ஆனது. சுடலையை பகைச்சவங்க ஆட்சியை இழப்பாங்க என்ற சாமியாடி முத்துராஜ் சாபம் கொடுத்ததும், ஜெயா ஆட்சியை இழந்ததும் கூட நடந்தது.
சிறுவயதில் இந்த கோவில் கொடைக்கு செல்லும்போதெல்லாம், சாமி சுடுகாட்டுக்கு தீப்பந்தத்துடன் வேட்டைக்குப் போவது, விடிய விடிய பலி கொடுக்கப்படும் ஆடுகளின் மார்பிலிருந்து பீய்ச்சி அடிக்கும் ரத்தத்தை வாய்வைத்து குடிப்பது போன்ற காட்சிகளை எல்லாம் பார்க்க அப்போது `திகிலாக’ இருக்கும். சாமி வேட்டைக்குப் போய்விட்டு வரும்போது வழியில் குறுக்கே போகக்கூடாது என்பார்கள். மீறி போனால் சங்கு தான் என்று திகிலுக்கு திகில் ஏற்றுவார்கள்.
இந்த திகிலை எல்லாம் தாண்டி அந்த திருவிழாவுக்கு வரும் ஜோவென்ற மக்கள் கூட்டம் , கரகாட்டம், இன்னிசைக் கச்சேரி என்று சுற்றி பார்த்து ஓய்ந்து கடைகளில் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு புல்தரையில் தூங்கி எந்திரிப்பது காலையில் கிணத்துலயோ குளத்துலயோ ஆட்டம் போட்டுட்டு வீடு திரும்புவது எனக்கு பிடித்தமானது.
பின்னர் பெரியாரை பற்றி படிக்க ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் இந்த விசயங்களையெல்லாம் கிண்டலடிக்கவும் செய்திருக்கிறேன். வாசிப்பு அனுபவம் மாறவே நாம டார்கெட் வைக்க வேண்டியது இந்த மாயன்களை இல்லை என்பது புரிந்தது.
``எல மக்கா.. எப்படிருக்க.. ரெண்டு மாசத்துல சிறுமளஞ்சி கோவில் கொட வருதுடே.. இந்த தடவயாவது வந்துரு..’’ என்று இன்று காலை போன் செய்து கொடைவிழாவுக்கு அழைத்த நண்பனின் குரல்.. எங்க ஏரியா மாயனை நினைவுப்படுத்திவிட்டது. கோடைகாலம் வந்தால்போதும்.. ஒவ்வொரு ஊரிலும் கொடைக்கு ரெடியாகிவிடுவார்கள். பல இடங்களில் புலம்பெயர்ந்து நிற்கும் உறவுகள் ஒன்றாக சந்தித்து விருந்து சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட மேட்டர் தான் கொடை என நினைக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் நண்பன் கொடைவிழாவுக்கு கூப்பிடுவான். வேலை காரணமாக போக முடியாமலாகிவிடும்.. இப்போது கொடைவிழா எப்படி நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை. சும்மா அனுபவத்திற்காக இந்த முறையாவது போகலாம் என்று யோசித்திருக்கிறேன்.. :)
--- கார்ட்டூனிஸ்ட்.பாலா
விழாவிற்கு சென்று வந்து அதைப்பற்றியும் பகிரவும்.... நன்றி....
ReplyDelete