Monday, January 3, 2011

கார்த்திக்... அனிதா.... காதல்...

கார்த்திக்..
சிவந்த நிறம், நல்ல உயரம். ஏதோ ஒரு சினிமா ஹீரோவின் சாயலை ஒத்த தோற்றம். தினமும் உடற்பயிற்சி செய்பவன் என்பதை அவனது ஃபிட்டான உடற்கட்டே சொல்லியது. ஏற்றி சீவப்பட்ட கேசம் அவ்வப்போது நெற்றியில் தவழ்ந்து அழகூட்டியது. தனியார் நிறுவனம் ஒன்றில் பொறுப்பான வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதிப்பவன். வீட்டிற்கு ஒரே பிள்ளை.
அன்று ஞாயிற்றுக் கிழமை, எனினும் சீக்கிரமாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தான். கூடுதலான அவனது உற்சாகமே கூறியது, தனது காதலியைப் பார்க்கப் போகிறானென்று. அவர்கள் வழக்கமாக சந்திக்கும் காஃபி ஷாப்புக்கு அவளை 10 மணிக்கு வரச் சொல்லியிருந்தான். சரியாக 9.45க்கு தனது கருப்பு நிற பல்சரைக் கிளப்பிப் பாய்ந்தான்.
காஃபி ஷாப்புக்குள் நுழையும்போது அவனது வாட்ச் மணி 10ஐ காட்டியது. திருப்தி அடைந்தவனாய் உள்ளே நுழைந்து பார்வையை சுழற்றினான். அவள் இன்னும் வரவில்லை. ஏனோ அன்றைக்கு ஆட்கள் அதிகமாக ஷாப்புக்குள் அமர்ந்திருந்தனர். யோசனையாய் ஒரு டேபிளில் அமர்ந்த கார்த்திக், தனக்கு ஒரு காஃபியை ஆர்டர் செய்துவிட்டு தனது காதலியின் வருகைக்கு காத்திருக்க ஆரம்பித்தான்.
.................................
அனிதா..
அழகி என்று சொல்ல முடியாதெனினும் நல்ல லட்சணமானவள். அழகான முகவெட்டு. உடலமைப்பிற்கேற்றபடி அந்தப் பச்சை நிற காட்டன் புடவை கச்சிதமாக அவளுக்குப் பொருந்தியிருந்தது. கார்த்திக்கை விட மூன்று வயது இளையவள். ஒரு அண்ணன் இருக்கிறான்.
கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஒரு கணிணி மையத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டாள். போதுமான சம்பளமும் சுதந்திரமும் கிடைக்கிற திருப்தியில் இருக்கும்போது தான் வீட்டில் திருமணத்திற்கு வரண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அனிதாவுக்கோ தனது காதலனை கைப்பிடிக்கும் நோக்கம். அதனால் மேற்கொண்டு வீட்டில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பேச தனது காதலனை பார்க்கக் கிளம்பிக்கொண்டிருந்தாள்.
அம்மாவிடமும் அண்ணனிடமும் சமாளித்துவிட்டு கிளம்பிவதற்குள் அனிதாவிற்குப் போதும் போதும் என்றாகி விட்டது. ஸ்டாப்பிற்கு வந்து சிறிது நிமிடம் காத்திருப்பிற்குப் பின் பஸ் வந்தது. தனக்காக அவன் வந்து காத்திருப்பானே என்ற கவலையுடனான 20 நிமிடப் பயணத்திற்குப் பின் இறங்கி ஷாப் இருக்கும் வழி நோக்கி நடந்தாள்.
ஒருவழியாக 10.15க்கு காஃபி ஷாப்பின் உள்ளே நுழைந்தாள். வழக்கத்தை விட இன்று கூட்டமாயிருக்கிறதே என்று குழப்பமாய் சுற்றிப் பார்த்தபடி கார்த்திக் இருந்த டேபிளை நோக்கி நகர்ந்தாள் அனிதா.
.................................
கார்த்திக் அவ்வப்போது வாட்சைப் பார்த்துக்கொண்டான். அனிதா அவனெதிரில் சென்று உட்கார்ந்தாள். தனது கைப்பையை மடியில் வைத்து சௌகரியமாய் உட்காரவும் வெய்ட்டர் வந்து ஆர்டர் கேட்கவும் சரியாக இருந்தது. யோசித்தவளாய் தனக்கும் காஃபியே ஆர்டர் செய்தாள். வெய்ட்டர் நகர்ந்தவுடன் இருவருமே மௌனமாய் இருந்தனர்.
இரண்டு நிமிடங்களில் காஃபி வந்தது. எடுத்து மெதுவாய்க் குடிக்க ஆரம்பித்தாள். ஆனாலும் அவர்களுக்குள் மௌனம் மட்டுமே இருந்தது. பில்லுக்கான பணமும் கொடுத்தாயிற்று.
கார்த்திக் அடிக்கடி அனிதாவை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டான். அவளோ எதுவுமே பேசாமல் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் அல்ல இரண்டு நிமிடம் அல்ல.. முழுதாகப் பதினைந்து நிமிடம் இந்த மௌனப் போராட்டம் நடந்தது. அதற்குப் பின் பொறுமையிழந்தவனாய் அந்தக் காரியத்தை செய்தான் கார்த்திக்..
வேகமாய் வெளியேறி தனது பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான். ஆனால் அனிதாவிடம் எந்த சலனமுமில்லை. தொடர்ந்து அமர்ந்திருந்தாள்.
.................................
என்ன முழிக்கிறீங்க??? யாரோ ஒருத்தன் வேகமா வெளிய போனா அனிதா எதுக்கு கவலைப்படணும்??
அனிதாவும் கார்த்திக்கும் லவ் பண்றாங்கனு நா சொன்னேனா??? கார்த்திக் தன்னோட காதலி வரலனு கோவமா போயிட்டான். அனிதா தன்னோட காதலனுக்காக வெய்ட் பண்றா. அவ்ளோ தான். அதுக்கெதுக்கு ஒரே டேபிள்ல உட்காரணும்னு கேக்குறீங்களா?? அட என்னங்க சின்னப்புள்ளத் தனமா கேக்குறீங்க?? அன்னைக்கு தான் காஃபி ஷாப் கூட்டமாயிருந்துச்சுல.. இடம் இல்லனு தான் எதிரெதிர்ல உக்காந்தாங்க. இது ஒரு தப்பா??
இப்ப என்ன தான் சொல்ல வரேன்னு கேக்குறீங்க.. அதானே..
ஒண்ணுமில்லங்க.. பதிவெழுதனும்னு முடிவாய்டுச்சு.. எதையாவது எழுதனும்ல.. ஐ மீன் கிறுக்கணும்ல.. (அப்பாடா.. ப்ளாக்கோட தலைப்பு வந்துடுச்சு)
அட என்ன பண்றீங்க..
நோ நோ இங்கல்லாம் துப்பக்கூடாது.
பின்னூட்டத்துல போய் காரிதுப்பிட்டு வேலையப் பாருங்க.
அடுத்த பதிவுல சந்திக்கலாம். வரட்டுமா..

--- இந்திரா 
 
 

No comments:

Post a Comment

You may also like