Wednesday, January 5, 2011

ஆட்டு நாக்கு

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், தில்லுதுர வீட்டில் பிரியாணி செய்யச் சொல்லியிருந்தார்.

டிபார்ட்மென்டல் ஸ்டோரில் முட்டை மற்றும் தேவையான ஐட்டங்களை வாங்கிக் கொண்டு, நேராக மட்டன் கடையில் வந்து பைக்கை நிறுத்தினார் தில்லுதுர.

நல்ல கூட்டம் கடையில்.

காய்கறி இன்னபிற உள்ள பையை பைக்கிலேயே வைத்துவிட்டு, முட்டையை மட்டும் பத்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு தன்னுடைய டர்னுக்காக காத்திருக்கும் போதுதான், அவர் கறிக் கடைக்காரர் மட்டன் வெட்டும் அந்த அடிமரக் கட்டையின் மேலிருந்த ஆட்டின் நாக்கைப் பார்த்துவிட்டுக் கேட்டார்.

"இன்னாதுப்பா அது..?".

கறிக் கடைக்காரர் எப்போதும்போல் உற்சாகமாய் பதில் சொன்னார்.

"ஆட்டோட நாக்கு சார்.ஒரு அம்மா எடுத்து வைக்கச் சொல்லிட்டுப் போயிருக்கிது..!".

தில்லுதுர ஆச்சர்யமாய்க் கேட்டார்.

"ஆட்டோட நாக்கை எல்லாமா தின்னுவாங்க..?".

கறிக்கடைக் காரர் சிரித்தார்.

"இன்னா சார் இப்பிடிக் கேட்டுட்ட.? ஷோக்கா இருக்கும். உனக்கு வோணுமா..?".

தில்லிதுர அருவருப்புடன் பதில் சொன்னார்.

"சேச்சே... ஒரு மிருகத்தோட வாயிலருந்து வந்ததை என் வாயில போடறதா..? சான்ஸே இல்லை..! கருமம்..கருமம்..".

கடையில் நின்றிருந்தவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்க்க, கறிக் கடைக்காரர் தில்லுதுர சொன்ன எதைப் பற்றியும் கவலைப்படாமல் கறியை வெட்டியபடியே கேட்டார்.

"அதென்ன சார் கையில வச்சிருக்கீங்க... முட்டையா..?" என்றார்.


-- மின்மினி தேசம்

No comments:

Post a Comment

You may also like