Friday, February 11, 2011

ஜெருசலேமில் தில்லுதுர

தில்லுதுர தன் மனைவி குழந்தைகள் மற்றும் மாமியாருடன் ஜெருசலேம் டூர் போயிருந்தார்.

நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த லோ பேக்கேஜ் டூர் அது.

கிளம்பியதில் இருந்து நல்ல விதமாகவே போய்க் கொண்டிருந்த அந்த 15 நாள் டூரின் நடுவில், சரியாக எட்டாவது நாளில் அந்தப் பிரச்சினை வந்தது.

எட்டாவது நாள் இரவில்தான் தில்லுதுரயின் மாமியாருக்கு நெஞ்சு வலி வந்தது.

நள்ளிரவு நேரம், பாஷை தெரியாத ஊர்.

என்ன செய்வது என்று முடிவு எடுத்து ஹாஸ்பிடல் கொண்டு சேர்ப்பதற்குள் மாமியாரின் கதை முடிந்தே விட்டது.

டாக்டர், 'மாமியாரின் கதை முடிந்தது...' என்று கையை விரித்ததும், மனைவியும் குழந்தைகளும் அழுது புலம்ப தில்லுதுர தனக்கு டூர் அரேஞ்ச் செய்த நண்பனை போனில் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான்.

நண்பன் அங்கே இங்கே என்று விசாரித்துவிட்டு தில்லுதுரயின் போனுக்கு வந்தான்.

"தில்லு.. மாமியார இங்கயே புதைச்சுட்டா நம்மூருப் பணத்துல இருபதாயிரம் தான் ஆகுமாம். அதே பாடிய நம்மூருக்கு கொண்டு போகணும்னா அஞ்சு லட்சத்தத் தாண்டுமாம். என்ன பண்ணனும்னு முடிவு பண்ணிச் சொல்லு..!".

அழுது கொண்டிருந்த மனைவி தில்லுதுரயின் முகத்தைப் பார்க்க, தில்லுதுர நண்பனிடம் போனில் சொன்னான்.

"இதோப்பாருடா... அஞ்சு லட்சமில்ல, அம்பது லட்சமானாலும் பரவாயில்ல. என் மாமியார எங்க ஊர்லதான் அடக்கம் பண்ணனும். ஏற்பாடு பண்ணு...!".

தில்லுதுர சொன்னபடி மாமியாரின் உடல் சென்னை வந்து அடக்கம் செய்யும் போது, செலவு கிட்டத்தட்ட ஏழு லட்சம் ஆகியிருந்தது.

வந்தவர்களில் தில்லுதுரயின் நெருங்கிய நண்பன் ஒருவன் கேட்டான்.

"ஏன்டா... அங்கயே எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்திருந்தா இந்த ஏழு லட்சம் மிச்சம்தானே..?".

நண்பன் கேட்டதும் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, தில்லுதுர தணிந்த குரலில் தன் நண்பனிடம் சொன்னான்.

"அங்கயே பொதச்சிருக்கலாம்தான். ஆனா, அந்த ஊர்லதான் யேசு கிறிஸ்து செத்துப் போன மூணாம் நாளே உயிரோட வந்தாராமே..! கைடு அன்னிக்கு காலைலதான் சொன்னான். சரி, மாமியார் விஷயத்துல எதுக்கு அந்த ரிஸ்க் எடுக்கணும்தான் செலவானாலும் பரவாயில்லேனு இங்கயே கொண்டு வந்துட்டேன்..!" என்றான்.
-- மின்மினி தேசம்


No comments:

Post a Comment

You may also like