Monday, August 1, 2011

நாலணா நண்பேன்டா!


திடுதிப்புன்னு இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கலை பாஸ்.. பொசுக்குன்னு இனிமே நாலணா செல்லாதுன்னுட்டாங்க..
நாலணா நம்ம வாழ்க்கைல எப்படி எல்லாம் விளையாடி இருக்கு. என்னமோ டிவி சீரியல்ல கால்ஷீட் சொதுப்புற நடிகைக்கு போட்டோ மாட்டி மாலை போட்டுவிடற மாதிரி, நாலணாவுக்கு கல்தா குடுத்துட்டாங்க. என்ன போங்கா இருக்கு பாருங்க..
ஸ்கூல் போகும்போது பாக்கெட் மணியா எப்பவாச்சும் 25 காசு குடுப்பாங்க. அந்த வயசுல பாக்கெட்ல அந்த நாலணா காயின் இருக்கும் போது ஒரு சந்தோஷம் பொங்கும் பாருங்க. இன்னிக்கு பாக்கெட்ல கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுன்னு நாலு கார்டு வெச்சிருந்தாலும் அந்த நாலணா காசுக்கு இதெல்லாம் ஈடாகாது பாஸ்!
பத்து காசா இருந்தா அன்னிக்கே செலவாகிடும். நாலணாவா இருந்ததுன்னா அதை செலவு பண்ண 4 நாள் ஆகும். அதை எப்படி செலவு பண்ணினா அதிகபட்சமா அனுபவிக்க முடியும்னு பெரிய லெவல்ல திட்டம் போடணும்.
இண்டெர்வெல்ல ஸ்கூல் வாசல்ல இருக்க ஆயா கடைக்கு போனா, அங்கே செமத்தியான கும்பல் இருக்கும். கய்யாமுய்யான்னு பசங்க ஒரே சத்தம் போட்டுகிட்டு இருப்பாங்க.
நெல்லிக்கா, கமர்கட், எலந்த பழம், கலாக்கா, மாங்கா பத்தை, பேரு தெரியாத ஒரு ஸ்வீட்டு... இன்னும் என்னென்னமோ இருக்கும். சின்ன பிளாஸ்டிக் விரிப்புல ஒரு மினி சூப்பர் மார்கெட்டே கிடக்கும். 'லக்கி கமர்கட்'னு ஒரு ஐட்டம்.. நாம கமர்கட் வாங்கி வாய்ல போட்டு கடிச்சு பாக்கணும்.. நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா கமர்கட்டுக்கு உள்ள காசு இருக்கும்.. அதிகபட்சமா நாலணா கூட கிடைக்க வாய்ப்பிருக்கு.
பள்ளிக்கூடம் வாசல்ல கடைபோட்டிருக்க ஆயாவோட கஜானா ஒரு சின்ன துணி தான். அந்த துணிக்கு அடில 5, 10, 20, 25, 50 காசு சில்லரைங்க கிடக்கும். ஆயா 'கஸ்டமர்'களுக்கு தேவையானதை எடுத்து கொடுத்துகிட்டே, "உனக்கு என்னா வேணும்..? உனுக்கு..? தம்பி.. வாங்கியாச்சுன்னா நிக்காத.. போ.."ன்னு பேசிகிட்டே வியாபாரத்தை நடத்தும். ஆயா மீதி சில்லரையை எடுத்து குடுக்கற அழகே தனி. குனிஞ்சு காசை பாக்காமலேயே கரெக்ட்டா கையால மீதி காசை எடுத்து குடுக்கும்.. பின்ன, காசை எடுக்க குனிஞ்சா அந்த அரை செகண்ட்ல பயபுள்ளைங்க நெல்லிக்காய அபேஸ் பண்ணிடுவானுங்களே.. ஆயா செம உஷாரு..!
ஆனா, எங்க 'பர்சேஸிங் பவரை' நம்பி கடை போட்ட அந்த ஆயாவோட தைரியத்தை இப்ப நினைச்சு பாத்தாலும் ஆச்சர்யமா இருக்கு.
பத்தாக்குறைக்கு பக்கத்துல குச்சி ஐஸ் வண்டி நிக்கும். "பால் ஐஸ்.. கப் ஐஸ்"னு அப்பப்ப கத்துவார் 'ஐஸ்'கார்.
கலர் ஐஸ் தின்னுருக்கீங்களா? ஒரு பட்டைல ஐஸ் வெச்சிருப்பாங்க.. மஞ்சள், ரோஸ், சிகப்புன்னு கலர் கலரா இருக்கும். ஐஸை தின்னு முடிச்ச பிறகு, நாக்கை வாய்க்கு வெளிய நீட்டி அது கலராகி இருக்கான்னு பாப்போம்.. ஐஸ் தீர்ந்த பின்னும் குச்சியை உறிஞ்சிட்டு நாக்கை சப்பை கொட்டுவோம்.
ரெண்டு மூணு பசங்க சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுண்ட்ல சேமியா ஐஸ் வாங்கி பங்கு போட்டுக்குவாங்க.. சேமியா ஐஸை தின்ன பிறகும் வாய் மேலண்ணத்துல சேமியா ஒட்டிகிட்டிருக்கும்.
பாக்கெட்ல சில்லரை காசு இருந்துச்சுன்னா, பால் ஐஸ் திங்கலாமா இல்லை நெல்லிக்கா வாங்கலாமானு மனசுக்குள்ள 'அந்நியன்' விக்ரம் மாதிரி ஒரு 'மல்டிபில் பெர்சனாலிட்டி' போராட்டமே நடக்கும்.

சில நேரத்துல ஆசைப்பட்டு பால் ஐஸ் வாங்கிடுவோம். ஆனா, பால் ஐஸ் வாங்கின உடனே 'பேசாம கமர்கட்டும், மாங்கா பத்தையும் வாங்கியிருக்கலாமோ..? பால் ஐஸ் சீக்கிரமா தீர்ந்துடும். கம்மர்கட் வாங்கியிருந்தா அதை கிளாஸ் நடக்கும்போது கூட திங்கலாம்..'னு மனசு கிடந்து அடிச்சுக்கும்.
அந்த பாழாப்போன ஐஸ் வண்டிக்காரன் வேற சும்மா இருக்காம ஐஸ் வண்டி மூடியை டமால் டமால்னு சத்தத்தோட தொறந்து தொறந்து மூடி, பிசினஸ் டெக்னிக்கால நம்மை கலங்கடிப்பான். அதை தொறந்து உள்ளேயிருந்து குச்சி ஐஸை எடுக்கும் போது சில்லுன்னு காத்து அடிக்கும் பாருங்க.. இப்பல்லாம் வீட்லயும் ஆபிஸ்லயும் ஏசி போட்டா வர குளிர் காத்து எல்லாம் அதும் முன்னாடி தூசி !
கிளாஸ்ல டீச்சர் பாடம் நடத்தும்போது, யாருக்கும் தெரியாம நெல்லிக்காயையோ, மாங்கா பத்தையையோ நைசா வாய்ல போட்டு மெல்லற சந்தோஷத்தை எந்த வார்த்தைகளால முழுசா விளக்கிட முடியும்..? இந்த சுவை என்று பிடிபடாத அந்த ரகசிய ருசி.. இனிப்பா.. உப்பா.. காரமா.. துவர்ப்பா.. இல்லை.. பால்யம். பால்யத்தின் ருசி அது.!
சில நேரம் கைல காசே இருக்காது.. இருந்தாலும் ஏனோ கடைகிட்ட போய் நின்னு, எவன் என்ன வாங்கறான்னு பாத்துகிட்டு, விண்டோ ஷாப்பிங் பண்ணிட்டு வருவோம்.
பாக்கெட் மணி காசுல பலூன், கோலி, பீப்பீ, பிகில்னு விளையாட்டு பொருட்களை வாங்கறது ஒரு பக்கம் இருக்க, காசையே விளையாட்டு பொருளா பயன்படுத்தறதும் உண்டு.
10 காசு 20 காசு நாணயத்தை பேப்பர் கீழ வெச்சு, பென்சிலால பேப்பர் மேல தேய்ப்போம்.. அந்த 'காசு அச்சு' பாக்க அழகா இருக்கும். எங்க கிளாஸ்ல கணக்கு டீச்சர் பாடம் நடத்தும் போது, நோட்டுல கடைசி பக்கங்கள்ல காசை வெச்சு, 'காசு அச்சு' வரைஞ்சுகிட்டிருப்போம்.. என கணக்கு நோட்டுல அப்படி 10 காசு 20 காசு அச்சா கிட்டத்தட்ட 35 ரூபாய் வரைக்கும் வரைஞ்சு வெச்சிருந்தேன்.
என் பக்கத்து சீட்டு ஆர்.பாலு 38 ரூபாய் 80 காசுக்கு அவன் நோட்டுல 'காசு அச்சு' வரைஞ்சு வெச்சிருந்தான். கணக்கு நோட்டுல யாரு அதிக ரூபா சேக்கறாங்கன்னு ஒரு நாள் எங்களுக்குள்ள கடும் போட்டி. என் நேரம்.. நான் வரையறதுக்கு என் கணக்கு நோட்டுல பேப்பர் வேற கம்மியா இருந்தது.
பத்து காசும் இருபது காசும் சைஸ்ல பெருசு. வரைய நோட்டுல பக்கம் பத்தாது. அதனால ரெண்டு பேரும் பேச்சு வார்த்தை நடத்தி, ஆட்டத்துல 25 காசையும் பயன்படுத்திக்கலாம்னு கலந்துரையாடி கூட்டுத் தீர்மானம் போட்டோம். பந்தயம்னு வந்த பிறகு பணம் இல்லாமலா..?
பந்தயப் பணம் = 25 காசு.
ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போனதும் விளையாடக் கூட போகாம, அம்மாகிட்ட கெஞ்சி கூத்தாடி நாலணா காயின் வாங்கி, உற்சாகத்தோட 'காசு அச்சு 'ஆட்டத்தை ஆரம்பிச்சேன்.
கள்ள நோட்டு அடிக்கறவன் கூட அவ்ளோ உஷாரா வேலை செய்வானானு தெரியாது பாஸ்.. நான் ரொம்ம்ம்ம்ப கவனமா கண்ணு முழிச்சு 'காசு அச்சு' வேலைய செஞ்சேன்.
கணக்கு நோட்ல கொஞ்சம் பக்கம் தான் பாக்கி இருந்தது.. ஸோ.. கவனமா இடத்தை வீணாக்காம வரையணும்.. கணக்கு நோட்டை எடுத்து, ரெண்டு பேப்பருக்கு நடுவுல நாலணாவை வெச்சேன்.. பென்சில் ஊக்கு கூரா இருந்தா இதுக்கு சரி வராது. அதனால, என் புத்திய கூர் தீட்டி, பென்சில் ஊக்கை மொண்ணையாக்கினேன். (இந்த மாதிரி நுணுக்கம் எல்லாம் சின்ன வயசுல நமக்கு டக்கு டக்குன்னு தோணும்.. வளர வளர புத்தி தேயும்) ஜாக்கிரதையா பென்சிலால பேப்பர் மேல தேய்ச்சேன்.. முதல் 25 காசு அச்சு நல்லா வந்திருச்சு..
வெறியோட மேற்கொண்டு வரைய ஆரம்பிச்சேன். அம்மா நான் என்னமோ கணக்கு பரிட்சைக்கு படிக்கறேன்னு நினைச்சுகிட்டு தூங்க போயிட்டாங்க.
பென்சிலை பிடிச்சு தேய் தேய்னு தேய்ச்சதுல கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் கருப்பு தொப்பி போட்டுகிச்சு. நகம் பூரா அழுக்கு.
ராத்திரி பூரா கண்ணு முழிச்சு 35 ரூபாய 68.75 ரூபாயா ஆக்கி முடிக்கும் போது பொழுது பொலபொலன்னு விடிஞ்சு கோழி, சேவல், வாத்து எல்லாம் கூவிடுச்சு.
கண்ணு எரிச்சலோட ஸ்கூலுக்கு போய் ஆர்.பாலுவை தேடினா அவனை காணோம்.. சரி அவன் வரதுக்குள்ள இன்னும் நோட்டுல இருக்க இண்டு இடுக்குல 25 காசு அச்சு வெக்கலாம்னு பேப்பரை புரட்டிட்டிருக்கேன்.... ஆர்.பாலு வந்துட்டான்.. அவன் கண்ணு ரெண்டும் ச்சும்மா கிரிக்கெட் பால் மாதிரி செவந்து கிடந்தது. பெருமையா என் கணக்கு நோட்டை அவன்கிட்ட நீட்டினேன்.. அரைக் கண்ணை கஷ்டப்பட்டு தொறந்து பாத்தான்.. சிரிச்சான்.. தன் கைல இருந்த நோட்புக்கை எங்கிட்ட நீட்டினான். எனக்கு புரிஞ்சு போச்சு.. அவனும் ராத்திரி பூரா கண்ணு முழிச்சு.. அட போங்கடா..
நாலணா தோத்துட்டேன் !
"டேய்.. சயின்ஸ் நோட்டுல யாரு அதிகமா காசு அச்சு போடறாங்கன்னு பாப்போமா..? 25 காசு பந்தயம் " விட்ட காசை பிடிக்க வழி தேடினேன்.
"வேண்டாம்டா.." சிரிச்சுகிட்டே சொல்லிட்டு நேரா ஸ்கூல் வாசலுக்கு போனான்.
நாலணாவுக்கு கண்டபடி வாங்கி சாப்பிட்டான். கணக்கு வழக்கில்லாம செலவு பண்ணான். என் நாலணா!
அன்னிக்கு மத்தியானம் கிளாஸ்ல கணக்கு டீச்சர் என் நோட்ல இருந்த காசு அச்சை பாத்து அடிச்ச அடி எனக்கு இப்ப கூட ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா.... வலிக்குது.
அதுக்கப்பறம் ஆர்.பாலு கூட பேச்சை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கிட்டேன். அவனைப் பார்த்தாலே வெறுப்பா வந்தது.
அடுத்த வருஷம் அவங்கப்பாவுக்கு வேலை மாத்தல் ஆனதால, ஸ்கூல்ல டிசி வாங்கிட்டு போயிட்டான்.
அப்பறம் பத்தாங்கிளாஸ் படிக்கும்போது ஒரு முறை ரோட்ல அவனை பாத்தேன். இருந்தாலும் கண்டுக்காம நகர்ந்துட்டேன். அதுக்குப் பிறகு பல வருஷங்கள் அவனை பாக்கவே இல்லை. கிட்டத்தட்ட அவன் முகமே மறந்து போச்சு.
போன வாரம் வேலை விஷயமா அவசரமா டெல்லிக்கு ஃப்ளைட்ல போக வேண்டியிருந்தது. ஃப்ளைட்ல என் சீட்ல போய் அக்கடான்னு உக்காந்தா, பக்கத்து சீட்ல வந்து ஒருத்தர் உக்கார்ந்தார்.. ஸாரி.. 'ர்' இல்லை.. 'ன்'.. உட்கார்ந்தான்.. ஆர்.பாலு. என் ஜென்ம விரோதி. என் நாலணாவை அபகரித்த நயவஞ்சகன்.
அவனை பாக்காத மாதிரி நடிச்சிடலாம்னு நான் முடிவு பண்ணின அதே நொடி, என்னைப் பார்த்து " ஹாய்.. ஆர் யூ மிஸ்டர் (என் பெயரைச் சொன்னான்)?"
ஆமாம்.. யெஸ் ரெண்டையும் கலந்து "ஆமெஸ்"னு உளறினேன்.
"என்னைத் தெரியலை.. நான் தான்டா பாலசுப்பிரமணி.. ஞாபகம் இருக்காடா.. ?" எத்தனை ' டா ' போடறான்.. மதிக்க மாட்டேங்கறான்.. மடையன்.
அப்பறம் என்னைப் பத்தி, பள்ளிக்கூடம் பத்தி, அவன் லவ் பண்ண பொண்ணைப் பத்தின்னு பத்தி பத்தியா பேசிட்டிருந்தான். எனக்கு பத்திகிட்டு வந்தது. அவன் சொன்னது சுத்தமா எதுவுமே மண்டைல ஏறல..
என் நினைவின் அடுக்குகளில் ஒளிந்து கொண்டிருந்த அந்த நாலணா இப்போது விஸ்வரூபம் எடுத்து புத்தி பூரா வியாபித்திருந்தது.
பேச்சை மாத்தறதுக்காக, "நீ இப்ப என்ன பண்ற?"ன்னேன்.
பெருமையா, "ரிசர்வ் பாங்க் ஆஃப் இண்டியால நல்ல போஸ்டிங்ல இருக்கேன்.. இப்ப 25 காசு செல்லாதுன்னு ஆர்டர் போட்டிருந்தோம் இல்லை.. அது சம்மந்தமா ஒரு கிளாரிஃபிகேஷன் கேட்டிருந்தாங்க.. நான் தான் இன்சார்ஜ்.. அதான் வந்துட்டு போறேன்.. ! "
அடப்பாவி..! அன்னிக்கு எங்கிட்டேந்து நாலணாவை பிடிங்கின.. இப்போ நாட்டுல எவனுமே நாலணாவை பயன்படுத்த முடியாம பண்ணிட்டியா..?
டெல்லி வந்ததும் கை குலுக்கிட்டு கிளம்பிட்டான். இவனை பாத்த குழப்பதுல நான் எதுக்காக டெல்லி வந்தேன்னே மறந்து போச்சு. கால, தேச, வர்த்தமான அவமானங்கள் எல்லாம் போய் ஒரு பள்ளிக்கூட பையன் மாதிரி ஆயிட்டேன்.
மேற்கொண்டு என்ன பண்றதுன்னு புரியாம பாக்கெட்ல இருந்த 25 காசு காயினை எடுத்து பாத்துகிட்டு நின்னுட்டிருக்கேன்..! வேற என்ன செய்ய முடியும் பாஸ்?!

மொத்தத்துல நாலணா இனி செல்லாது.. நம் மனதை விட்டும்!

-- விகடனிலிருந்து

No comments:

Post a Comment

You may also like