பரமார்த்த குருவுக்கு ஒரு பணக்காரன் இலவசமாக ஒரு குதிரையைக் கொடுத்தான்.
அந்தக் குதிரையோ கிழடு தட்டிப் போயிருந்தது. ஒரு கண் நொள்ளை! ஒரு காது மூளி! முன் கால்களில் ஒன்று நொண்டி! பின் கால்கள் வீங்கிப் போய் இருந்தன.
உடம்பு பூராவும் சொறிபிடித்து, பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தது. இருந்தாலும், பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் பரம சந்தோஷம். 'பணம் செலவு செய்யாமல் இலவசமாகக் கிடைத்ததே!' என்று நினைத்தனர்.
"குருவே! கடிவாளம் கட்டுவதற்கு வார் இல்லை. அதனால் வைக்கோல் பிரியைச் சுற்றி விடலாம்!" என்று அப்படியே செய்தான் மட்டி.
குரு உட்காருவதற்காக, கிழிந்து போன பழைய கந்தல் கோணி ஒன்றைக் குதிரைமேல் போட்டான் மண்டு. எருக்கம் பூவைப் பறித்து மாலையாக்கி குதிரையின் கழுத்தில் அணிவித்தான், முட்டாள்.
இவர்கள் செய்வதைப் பார்ப்பதற்கு ஊரே கூடி விட்டது. குதிரைக்கு எல்லா அலங்காரமும் முடிந்தது.
தொந்தியும், தொப்பையுமாய் இருக்கும் பரமார்த்தர், குதிரையின் மேல் பெருமையோடு ஏறி உட்கார்ந்தார். அவ்வளவுதான்!
கனம் தாங்காமல் வலியால் குதிரை அலற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அப்படியே படுத்து விட்டது.
"சே, சே! இதென்ன சண்டித்தனம் பண்ணுகிறது?" என்று சலித்துக் கொண்டே கீழே இறங்கினார் குரு.
முட்டாளுக்கு ஒரு யோசனை தோன்றியது. கையில் வைத்திருந்த கொள்ளிக் கட்டையைக் கொண்டு போய் குதிரையின் காலில் வைத்தான். உடனே அது விலுக்கென்று உதைத்துக் கொண்டு எழுந்தது. இப்படியும் அப்படியுமாக கொஞ்ச தூரம் ஓடி நின்றது.
மறுபடியும் குரு அதன் மேல் உட்கார்ந்தார். இப்போது மட்டி, அதன் வாலைப் பிடித்து முறுக்கினான். கோபம் கொண்ட குதிரை எட்டி ஓர் உதை விட்டது.
அது உதைத்த உதையில் கீழே விழுந்து புரண்ட மட்டிக்கு நாலு பற்கள் உடைந்து விட்டன! வாயெல்லாம் ரத்தம்.
இதை எல்லாம் பார்த்த குருவுக்கு உதறல் எடுத்தது.
சீžடர்களே! எனக்குப் பயமாக இருக்கிறது. நான் கீழே இறங்கி விடுகிறேன்!" என்றார்.
"குருவே! நீங்கள் கவலையே பட வேண்டாம். அப்படியே உட்கார்ந்து இருங்கள். நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்!" என்று பதில் சொன்னான் முட்டாள்.
மண்டுவுக்கும் மடையனுக்கும் வேறு ஒரு யோசனை உதித்தது.
குதிரைக்கு முன்னால் நின்று கொண்டு, முகத்தைக் கோணலாக்கி, கண்களை உருட்டி, உதட்டைப் பிதுக்கி, "ஆ....ஊ....ஊ..." என்று ஊளையிட்டுப் பயம் காட்டினார்கள்.
இதனால் குதிரை ஒரேயடியாக மிரண்டு, மெல்ல மெல்லப் பின் பக்கமாக நடக்க ஆரம்பித்தது! குருவுக்கும், சீடர்களுக்கும் அதிசயமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சுற்றி இருந்தவர்கள் கைதட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
தொடர்ந்து பின்பக்கமாகவே குதிரை ஓடவும் தொடங்கியது.
"நொண்டிக் குதிரை! நொள்ளைக் குதிரை! குருவுக்கேற்ற குதிரை! கழுதைபோல எட்டி உதைக்கும்! நாயைப் போல் ஆளைக் கடிக்கும்! ஓரம் போங்கோ! வழியை விடுங்கோ!" என்று பாடியபடி சீடர்கள் போய்க் கொண்டு இருந்தனர்.
பின்பக்கமாகவே ஓடுவது குதிரைக்குப் பழகி விட்டது.
அப்போது அடுத்த ஊரின் எல்லை வந்தது. அங்கிருந்த மணியக்காரன் இவர்களை நிறுத்தினார்கள்.
"வெளியூர்க் குதிரைக்கு வரி கட்ட வேண்டும். பத்துப் பணம் எடுங்கள்" என்றான்.
"வரியா? நான் ஏறி வருகிற குதிரைக்கு வரிக வாங்கலாமா? அதுவும் இது இனாமாகவே வந்த குதிரை. இதற்கு வரி கட்ட மாட்டோம்!" என்று கூறினார் குரு.
"எதுவானாலும் சரி. வரி கொடுக்காவிட்டால் விடமாட்டேன்" என்று சொல்லி அவர்களை மடக்கினான், மணியக்காரன்.
"நாம் கொடாக்கண்டன் என்றால் இவன் விடாக்கண்டனாய் இருக்கிறானே!" என்று நினைத்து ஐந்து பணம் கொடுத்தனர்.
"இன்னும் ஐந்து பணம் கொடுங்கள்"
"ஒரு குதிரைக்கு ஐந்து பணம்தானே வரி?"
"ஒரு பக்கம் மட்டும் போகும் குதிரைக்குத்தான் ஐந்து பணம். உங்கள் குதிரை பின்னாலும் போகிறதே!"
"இதென்ன அநியாயம்?" என்று வருத்தப்பட்டு மேலும் ஐந்து பணம் தந்தனர்.
"இந்தக் குதிரையால் நமக்கு எவ்வளவு பணம் நஷ்டமாகிறது?" என்று சொன்னபடி பயணத்தைத் தொடர்ந்தனர்.
ஒரு வழியாக ஊருக்குள் நுழைந்து, ஒரு மடத்துக்குப் போனார்கள். அப்போது இரவு நேரம். எல்லோருக்கும் களைப்பாக இருந்ததால், குதிரையைக் கட்டிப்போட மறந்து, தூங்கி விட்டனர்.
காலையில் எழுந்து ஆளுக்கொரு பக்கமாகத் தேடிக் கொண்டு போனார்கள்.
கடைசியில் ஒரு வயலுக்குப் பக்கத்தில் அந்தக் குதிரை கட்டப்பட்டு இருந்தது!
"இது இரவு முழுவதும் என் வயலில் இறங்கி பயிர்களை எல்லாம் நாசம் செய்து விட்டது. அதற்குப் பதிலாகப் பத்துப் பணம் கொடுத்தால்தான் குதிரையை விடுவேன்" என்று சொன்னான், அதைக் கட்டி வைத்திருந்த உழவன்.
அவனிடம் பேரம் பேசி நான்கு பணம் கொடுத்து விட்டுக் குதிரையை ஓட்டி வந்தனர்.
"" இந்தக் குதிரையால் நமக்குப் பெரும் தொல்லை. என் மானமே போகிறது.! பேசாமல் இதை விட்டு விடலாம்! என்று வருத்தப்பட்டார் குரு.
அப்போது அங்கிருந்த ஒருவன், குதிரைக்குப் பீடை பிடித்துள்ளது. அதனால்தான் இப்படி ஆகிறது. அந்தப் பீடையைக் கழித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். செலவோடு செலவாக எனக்கும் ஐந்து பணம் கொடுங்கள் என்று யோசனை சொன்னான். குருவும், žடர்களும் மூக்கால் அழுது கொண்டே அவனிடம் பணம் கொடுத்தனர்.
பிறகு, குதிரையின் ஒரு காதைப் பிடித்துக் கொண்டு "ஆ! பீடையெல்லாம் இந்தக் காதிலேதான் இருக்கிறது. இதனால்தான் ஏற்கனவே ஒரு காதை அறுத்திருக்கிறார்கள். இப்போது இந்தக் காதையும் அறுத்து விட்டால் சரியாகி விடும்!" என்றான், ஏமாற்றுக்காரன்.
உடனே மட்டி, மண்ணில் விழுந்து புரண்டு, "சீக்கிரம் காதை அறுங்கள்!" என்று குதித்தான். மூடனோ ஓர் அரிவாளைத் தீட்டிக் கொண்டு வந்து கொடுத்தான்.
எல்லோரும் பிடித்துக் கொள்ள, ஏமாற்றுக்காரன், குதிரையின் காதை அறுத்து எடுத்தான்! குதிரையோ வலி தாங்காமல் கீழே விழுந்து கதறியது. பிறகு உயிரை விட்டது!
எல்லோரும் அறுத்த காதைக் கொண்டு போய் ஆழக் குழி தோண்டிப் புதைத்தனர்.
"ஒழிந்தது பீடை! இனி மேல் கவலையில்லை!" என்றான், ஏமாற்றுக்காரன்.
கொலைகார பரமார்த்த குருவும் சீடர்களும் மகிழ்ச்சியோடு அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்கள்.
No comments:
Post a Comment