ராமசாமியும் கிருஷ்ணசாமியும் நண்பர்கள். சிறு வயது முதலே இருவரும் கிரிக்கெட் விளையாடுவார்கள். இப்போது இருவருக்கும் எண்பது வயது.
கிருஷ்ணசாமி படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று தெரிந்து அவரைப் பார்க்க வந்தார் ராமசாமி. நண்பரை சமாதானப் படுத்த எண்ணிய ராமசாமி, "கவலைப்படாதே கிருஷ்ணசாமி, உலகக் கோப்பை முடியறவரைக்கும் நீ சாகமாட்டே" என்றார்.
கிருஷ்ணசாமி சமாதானமாகவில்லை. "எனக்கு சாகறதைப் பத்திக் கூடக் கவலை இல்லைடா, என்னைப் பிரிஞ்சு நீ எப்படி வாழப் போறியோன்னு தான் கவலை" என்றார்.
ராமசாமி, "உண்மைதான்டா, சரி நீ ஒண்ணு மட்டும் செய், ஒரு வேளை இறந்து போயிட்டா மேல் உலகத்தில கிரிக்கெட் விளையாட முடியுமான்னு என் கனவில வந்து சொல்றியா?" என்று கேட்டார். "அதுக்கென்னடா, நிச்சயம் சொல்றேன்"னு சொல்லிட்டு கொஞ்ச நாளில் இறந்துவிட்டார்.
ஒரு நாள் இரவு, ராமசாமி தூங்கும்போது கனவில் கிருஷ்ணசாமி வந்தார். நண்பனைப்பார்த்து ஆனந்தமாகக் கேட்டார், "அந்த உலகத்தில ஏதாவது விசேஷம் உண்டா?"
"உண்டு, ஒரு நல்ல செய்தி, கெட்ட செய்தி ரெண்டு இருக்கு, எதை முதல்ல சொல்லட்டும்?" என்று கேட்டார் கிருஷ்ணசாமி.
"நல்ல செய்தி முதல்ல" - இது ராமசாமி.
"மேல் உலகத்தில கூட கிரிக்கெட் விளையாடறாங்க. இப்பக் கூட அங்கேயும் வேர்ல்ட் கப் மேட்ச் நடக்குது" என்றார் கிருஷ்ணசாமி.
"சரி, கெட்ட செய்தி?" ஆர்வமாகக் கேட்டார் ராமசாமி.
சோகமாகச் சொன்னார், கிருஷ்ணசாமி, "நாளைய மேட்சுல, நீயும் ஆடறே!"
No comments:
Post a Comment