Wednesday, March 28, 2012

நட்பு காலம் I - அறிவுமதி


 *******

எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது

*******

கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்

********

உனக்கு மடல் எழுத
உட்காருகிற போது
மட்டும்தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக் கிடைத்து
விடுகின்றன

*********

போக்குவரத்து அதிகமுள்ள
அந்தச் சாலையோரத்தில்
நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது
எத்தனை முறை
காதுகளுக்குத்
திரும்பினோம் என்று
சொல்லிவிட முடியுமா
உன்னால்.

***********

பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்

***********

போகிற இடத்தில்
என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை

***********

  -- கவிஞர் அறிவுமதி 

No comments:

Post a Comment

You may also like