*********
நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள்
நீ
*********
அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே....
''எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில்
இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்''
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்.
*********
அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
இதயங்களின்
நட்பில் இருக்கிறது
*********
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை ....
*********
என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு
*********
'எனக்கு மட்டும்' என்று
குவிகிற
மையத்தையே
காம்பாக்கிக் கொண்டு
'வெளி'வாங்கிப்
பூக்கிறது
நட்பு
*********
ஆய்வை முடிக்கிறவரை
காதலனை
வரவேண்டாம் என்று
கட்டளையிட்டாய்
வந்துகொண்டே
இருக்க வேண்டும்
என்று என்னிடம்
கெஞ்சினாய்
உன்னைக்
காதலிப்பவனும்தான்
எவ்வளவு
உயர்ந்தவன்
உணர்ந்து கொண்ட மௌனத்திற்கென்றே
ஒரு
புன்னகை
இருக்கத்தான்
செய்கிறது
என்பதை அவன்தானே எனக்குச்
சொல்லிக் கொடுத்தான்
*********
-- கவிஞர் அறிவுமதி
No comments:
Post a Comment