ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான்.
தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான்.
பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? என்று வேண்டினான். தெய்வமும் "அப்படியே ஆவாய்" என்றது. அவன் அரசனாகி விட்டான்.
முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் தேரில் ஊர்வலம் போனான். அப்போது கடுமையான வெயிலடித்தது. அவன் வெயிலின் கொடுமையால் வெந்து புழுங்கினான். அவன் "தெய்வமே அரசனை விட சூரியனே அதிக சக்தி படைத்ததாகத் தெரிகிறது. எனவே நீ என்னை சூரியனாக்கி விடு" என்றான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் சூரியனாகி எல்லோரையும் சுட்டான்.
அப்போது ஒரு மேகம் அவனுக்கும் பூமிக்கும் இடையில் வந்தது. அதனால் பூமியில் உள்ளவர்களைச் அவனால் சுட முடியவில்லை. "தெய்வமே மேகம் சூரியனின் கதிர்களையே தடுக்கக் கூடிய சக்தியுடையதாக இருக்கிறது. ஆகையால் என்னை மேகமாக்கி விடு" என்று வேண்டினான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் மேகமாகி சூரியக் கதிர்களைத் தடுத்தான்.
பூமி மீது பெரு மழை பொழிந்தான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, வீடுகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன, வயல்களெல்லாம் அழிந்து விட்டன. ஆனால் ஒரு பாறை மட்டும் அசையாமல் நின்று கொண்டிருந்தது. அவன் வெள்ளத்தை உண்டாக்கி எவ்வளவோ முயன்று பார்த்தான் அந்தப் பாறையை அசைக்கவே முடியவில்லை. "தெய்வமே மேகத்தை விடப் பாறையே சக்தி வாய்ந்தது எனவே என்னை பாறையாக்கி விடு" என்றான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் பாறையாகி விட்டான்.
கர்வத்தோடு அமர்ந்திருந்தான். அப்போது அங்கே ஒருவன் உளியும் சுத்தியலும் கொண்டு வந்து அந்தப் பாறையை உடைக்க தொடங்கினான். அவன் உளி பாறையைத் தகர்க்கத் தொடங்க்கியது. "தெய்வமே பாறையை விடக் கல்லுடைப்பவன் சக்தி மிகுந்தவன். என்னை கல்லுடைப்பவனாகவே ஆக்கி விடு.” என்றான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் மீண்டும் கல்லுடைப்பவனாக ஆகி விட்டான்.
கல்லுடைப்பவன் கல்லுடைப்பவனாகவே இருக்க வேண்டும். ஆசைப்படக் கூடாது என்பதல்ல இந்தக் கதையின் நீதி. ஆசைக்கு எல்லை இல்லை. ஆசைப்படுபவன் நிம்மதியாக இருக்க முடியாது என்பது தான் இக் கதையின் நீதி.
No comments:
Post a Comment