Tuesday, December 21, 2010

பழையகதை, புதிய கருத்து

நமக்கு எல்லாருக்கும் தெரிந்திருக்கும் ஒரு பழைய கதைக்குள் இருக்கும் புதிய கருத்தைப் பற்றி பார்ப்போம்.

முயலுக்கும், ஆமைக்கும் நடந்த ஓட்டப்பந்தயக் கதை நாம் அறிந்ததுதான்.

முயலுக்கும் ஆமைக்கும் இடையே ஓட்டப்பந்தயத்தில் யார் முதலில் வருவார்கள் என்று வாக்குவாதம் நடந்தது. ஓட்டப்பந்தயம் வைப்பது என்று முடிவானது. ஓட்டப்பந்தயம் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் முயல் ஓட்டப்பந்தய எல்லைக்குப் பக்கத்தில் இருந்தது. நாம் சிறிது நேரம் தூங்கினாலும் கூட. சுலபமாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்து சிறிது நேரம் கண் அயர்ந்தது. நன்றாக உறங்கியும் விட்டது. மெல்ல நடந்து முன்னேறிய ஆமை இலக்கை அடைநது வெற்றி பெற்றது.

இதில் இருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன?

நிதானமாக செயல்பட்டால், வெற்றி இலக்கை முதலாவதாக அடையலாம் என்பதுதான் நாம் அறிந்து கொண்டது.

மேல் கூறிய கதையைத்தான், ஆண்டாண்டு காலமாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்குப் பிறகு என்ன நடந்தது என்று பார்ப்போம்.

உறங்கிக் கண் விழித்த முயல் மிகவும் வேதனை அடைந்தது. ஏன் தான் தோல்வி அடைந்தோம் என்று ஆராய்ந்தது. தான் மிகவும் மெத்தனமாக இருந்தால்தான் தோற்றுப்போனோம் என்று முடிவு செய்தது. தான் எதையும் லேசாக எடுத்துக் கொள்ளலாமல், முழு மனதோடு போட்டியில் கலந்து கொண்டால், ஆமையை சுலபமாக வென்றுவிடலாம் என்று நினைத்தது, மீண்டும் ஆமையை சந்தித்து மற்றொரு போட்டி வைத்துக் கொள்ளலாம் என்று கூறியது.

இந்தமுறை எந்தத் தடையும் ஏற்படாமல் முயல் வேகமாக ஓடி இலக்கை அடைந்து, பல மைல் தொலைவு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

இதில் இருந்து நாம் அறிவது என்ன?

வேகமும் விவேகமும் இருந்தால் நிதானமாக செயல்படுபவரை முறியடித்து முன்னேறிவிடலாம் என்பதுதான்.

உங்கள் ஸ்தாபனத்தில் இருவர் இருக்கிறார்கள். ஒருவர் நிதானமாகச் செயல்படுவார், மிகவும் நம்பிக்கைக்கு உரியவர். அதே போல் இருக்கும் இன்னொரு நபர் வேகமாக செயல்படுபவர் இருவரும் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர் இதில் இரண்டாவதாகக் கூறிய வேகமாகச் செயல்படுபவர் நிச்சயமாக முதலாமவரைக் காட்டிலும் வேகமாக வாழ்க்கையில் முன்னேறி விடுவார் சரிதானே?

நிதானமாக இருப்பது அவசியம்தான், அதைவிட வேகமாக செயல்படுவது நல்லது. சரி கதை இத்தோடு முடிந்தது என்று நினைக்கிறீர்களா? இல்லை நண்பர்களே கதை மீண்டும் தொடருகிறது.

இந்த முறை, தான் ஏன் தோல்வி அடைந்தோம் என்று ஆமை சிந்தித்தது. எப்படி முயலை ஜெயிப்பது என்று யோசனை செய்தது. பிறகு முயலை சந்தித்து, மற்றொரு ஓட்டப்பந்தயத்திற்கு ஏற்பாடு செய்கிறது. இந்த முறை வேறு பாதையில் செல்லலாம் என்று முயலிடம் கூறுகிறது. முயல் சரி என்று ஒத்துக் கொள்கிறது.

ஓட்டப்பந்தயம் தொடங்குகிறது. சிறிது தூரம் வந்த பிறகு முயல் நின்று விடுகிறது. காணரம் பாதையின் நடுவில் ஒரு பெரிய ஆறு ஓடுகிறது. என்ன செய்வது என்று திகைத்து நிற்கிறது முயல். இதற்கிடையில் ஆமை ஆற்றங்கரையை மெல்ல அடைந்து ஆற்றில் இறங்கி, நீந்தி மறுகரையை தொட்டு, இலக்கை அடைந்து வெற்றி பெறுகிறது.

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? முதலில் நாம் எதில் சிறந்து விளங்க முடியும் என்பதைக் கண்டுபிடித்து, அதில் உழைக்க வேண்டும்.

ஒரு ஸ்தாபனத்தில் பணிபுரியும் நீங்கள். நல்ல பேச்சாளர் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்த சந்தர்பங்களை உருவாக்க வேண்டும்.

அதேபோல், நீங்கள் ஆராய்வதில் வல்லவர் என்றால், ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து, உங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

உங்கள் திறமை எது என்று கண்டுபிடித்து அதில் உழைத்து முன்னேற முற்பட்டால் வெற்றி நிச்சயம்.

ஆனால் கதை இன்னும் முடியவில்லை. ஆமையும் முயலும் இப்பொழுது நல்ல நண்பர்கள்களாக மாறி இருந்தனர். இருவரும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தனர். போன முறை இருவரும் சென்ற ஓட்டப்பந்தயதை, இந்த முறை இன்னும் சிறப்பாக வேறு முறையில் செயல்பட முடிவு செய்கின்றனர். இந்த முறை இருவரும் சேர்ந்து செயல்பட முடிவு செய்கின்றனர்.

ஓட்டப்பந்தயம் தொடங்குகிறது. ஆனால் இந்த முறை முயல் ஆமையை தூக்கிக்கொண்டு ஆற்றங்கரை வரை ஓடுகிறது. அங்கே ஆமை, முயலைத் தூக்கிக் கொண்டு ஆற்றில் நீந்தி மறுகரையை அடைகிறது. இப்போது முயல், ஆமையை சுமந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடுகிறது. இருவரும் ஓரே நேரத்தில், மிகவும் குறைந்த நேரத்தில் இலக்கை அடைகிறார்கள். இதுவரை ஏற்படாத திருப்தி இருவருக்கும் ஏற்படுகிறது.

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன?

நீங்கள் ஒரு பொருளை விற்பதில் கெட்டிக்காரர் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் நண்பர், அந்தப் பொருளை தயாரிப்பதில் வல்லவர் என்று வைத்துக் கொள்வோம். இருவரும் சேர்ந்து செயல்பட்டால், தரமான பொருளைத் தயாரிக்கவும் முடியும், அதே சமயம் அப்பொருளின் விற்பனையையும் அதிகரிக்க முடியும். சேர்ந்து செயல்பட்டால் இருமடங்காகும்.

இந்தக் கதையில் இருந்து நாம் அறிவது என்ன?

* தோல்வி அடைந்தால் தளர்ந்து போகாமல் அடுத்தது என்ன என்று சிந்தியுங்கள்.

* வேகமும், விவேகமும் நிச்சயமாக நிதானத்தை தோற்கடிக்கும்.

* நமது திறமையை கண்டறிந்து, அதில் உழைக்க வேண்டும். எதிரியை எதிர்த்து போராடாமல் சூழ்நிலையை எதிர்த்து பேராடுங்கள்.

* இணைந்து செயல்பட்டால், தனித்து செயல்படுவதைக் காட்டிலும் அதிகமாக பயன் அடையலாம்.

இதனை எல்லாம் மனதில் கொண்டு, வெற்றியை நோக்கி முன்னால்

வாருங்கள் தோழர்களே!


No comments:

Post a Comment

You may also like